வெள்ளி, செப்டம்பர் 24, 2010

கதைக்க வேண்டாம்

எங்கள் தேசம் தமிழீழம்
  எமக்கும் தமிழே மொழியாகும்
உங்கள் புறநா நூற்றுத் தாய்
  தொப்புள் கொடியின் உறவாகும்


சிங்கத் தமிழன் படை நடத்தி
 வென்று முடித்த தேசமிது.
சிங்களப் பேய்கள் வெறி கொண்டு
  தின்ற மயானம் ஆகியது.


விடுதலை என்னும் கனவெல்லாம்
  வீணாய்ப் போனது துரோகத்தால்.
தொட முடியாத தூரத்தில்
   தலைவா தமிழா  பாவம் என்செய்வாய்?


சங்கத் தமிழும் குறளோ வியமும்
  சத்தம் போட்டு பாடுங்கள்
எங்கள் ஓலம் இடைஞ்சல் என்றால்
  இன்னும் உரக்கப்  பாடுங்கள்.


கங்கை கொண்டான் கடாரம்  கொண்டான்
  காவியப் பெருமை பாடுங்கள்
எங்கோ ஈழம் எரிந்தால் என்ன
  இலக்கிய அழகைப்  பாருங்கள்.

செம்மொழி  ஆன தமிழுக்கு
  சீர்மா நாடு நடத்துங்கள்
அம்மா அய்யோ ஓலங்கள்
  அபஸ்வரம் காதைப் பொத்துங்கள்.


சேர சோழ பாண்டிய மன்னர்
  திறமை வியந்து பேசுங்கள்
ஈரம் நெஞ்சில் எஞ்சி இருந்தால்
  எடுத்து துடைத்து வீசுங்கள்.

எம்.பி.க்கள் யாரையும் அனுப்பாதீர் 
  என்ன கிழித்தார் சத்தியமாய்?
நம்பி இருங்கள் அங்கேயே
  நாங்கள் இருப்போம் பத்திரமாய்.

முடங்கிக் கிடக்க முள்வேலி உண்டு.
  மூச்சை சத்தமாய் விடமாட்டோம்.
அடங்கிக் கிடப்போம் அடிமைகளாய்
  ஐ.நா. அமைப்பிடம் சொல்லுங்கள்.

இனியும் இழக்க எதுவும் இல்லை
     எம்மை மறந்து செல்லுங்கள். 
*கணியன் போன்று இனியும் யாரும்
  கதைக்க வேண்டாம் சொல்லுங்கள்.

பிழைக்கத் தெரிந்த மனிதர் நீங்கள்
  பிழைப்பைப் பார்க்கச்  செல்லுங்கள்
இழைத்த கொடுமை போதா தென்றால்
  இலங்கை அரசிடம் சொல்லுங்கள்.


வாழத் தெரிந்த தலைவர் தமிழர் நீங்கள்
  வளமாய் நலமாய் வாழுங்கள்
ஈழம் சொட்டும்   இரத்தம் தொட்டு
  இனவரலாறு எழுதுங்கள்.

                                         -சிவகுமாரன்


*யாதும் ஊரே யாவரும் கேளிர்
                                        -கணியன் பூங்குன்றனார்.

3 கருத்துகள்:

  1. செருப்பால் அடித்தது போல் இருக்கும் சிலருக்கு கவிதையை படிக்கையில்.
    இன்னும் அவர்களை நம்புகிறதே சமூகம்
    -பாலா

    பதிலளிநீக்கு
  2. \\\ ஈழம் சொட்டும் இரத்தம் தொட்டு
    இனவரலாறு எழுதுங்கள் ////
    இரத்தம் கூட இல்லை அய்யா எங்கள் ஈழத்தில்.
    எமக்காய் உயிர் நீத்த மாவிரர்களை நினைவு கூறும் இந்த நேரத்தில் ஒன்றைச் சொல்கிறேன்.
    கொன்றது புலிகளைத்தான். போராட்டத்தை அல்ல.

    பதிலளிநீக்கு