திங்கள், செப்டம்பர் 06, 2010

கடவுள் எங்கே?

                    

கடவுள் என்பவன் உண்டா இல்லையா
  காட்டெனச் சொல்லும் மனிதர்களே!
அட இது என்ன அற்பக் கேள்வி
  அனைத்துப் பொருளிலும் கடவுள் தான்.
நடப்பன நிற்பன ஊர்வன பறப்பன
  நாற்புற மெங்கும் கடவுள் தான்.
மடத்தனம் கொண்ட மனிதர் இதனை
  மறந்து போனது விந்தை தான்.

பசித்த மனிதன் கையில் இருக்கும்
  காய்ந்த ரொட்டியும் கடவுள் தான்.
புசிக்கும் வேளையில் பறிக்கப் பட்டால்
  பார்ப்பவை எல்லாம் நரகம் தான்.
நசிந்த மனிதன் நலமுடன் எழுந்து
  நகைப்பதில் கூட கடவுள் தான்.
விசித்திர மனிதர் இதனை மறந்து
  வேதம் படிப்பது விந்தை தான்.

காவடி தூக்கி பால்குடம் ஏந்தி
  கால்கள் வலிக்க நடப்பதுவும்
தேவனின் திருவடி தேடித் தேடி
  தேசம் எங்கும் அலைவதுவும்
யாவரும் இங்கே செய்யும் காரியம்
  யாதொரு பயனும் இல்லையடா.
பாவச் செயல்கள் செய்யப் பயப்படு
  பக்தியின் தேவையே இல்லையடா.

வாயில் மந்திரம் சொல்வதில் இல்லை
  வாய்மை நேர்மை கடவுளடா
தாயில், தந்தை காட்டும் அன்பில்,
  தன்னில், பிறரில் கடவுளடா.
நோயில் வறுமையில் நொந்தவர் உள்ளம்
  நெகிழச் செய்வதில் கடவுளடா
கோயில் குளத்தில் கடவுள் இல்லை
  குணத்தில் மனத்தில் கடவுளடா.

                                                             -சிவகுமாரன்.


(1994ஆம் ஆண்டு நாத்திகத்தில் இருந்து  நகர்ந்து செல்ல ஆரம்பித்த காலம் )

4 கருத்துகள்:

  1. கடவுள் உண்டா இல்லையான்னு தலைவர் சொல்லிட்டருப்பா என்திரன்ல.

    பதிலளிநீக்கு
  2. engum kadavul irukka, kovil, kulathil mattum illamal povathu yeano?

    பதிலளிநீக்கு
  3. அதன் பொருள் கோவில் குளத்தில் மட்டும் கடவுள் இருப்பதில்லை. எல்லா இடத்திலும் இருக்கிறார் என்பதே. சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது தானே கவிதை. நான் புதிதாய் சொல்லவில்லை. "உள்ளம் பெருங்கோவில் , ஊனுடம்பு ஆலயம்" என்று திருமூலரும் , "நட்ட கல்லும் பேசுமோ, நாதன் உள்ளிருக்கையில்" என்று சிவவாக்கியரும் சொன்னதுதான்.

    பதிலளிநீக்கு
  4. அழகான புரிதல். அற்புதமான கவிதை. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு