சனி, ஜனவரி 06, 2018

ஆப்பிரிக்கக் காடு


நெடுநெடென மரங்களெல்லாம் விண்ணகத்தை நாடும்.
   நெஞ்சுக்குள் ஊடுருவி குயிலொன்று பாடும்.
குடுகுடென மானினங்கள் குதித்தங்கே ஓடும்
   குரங்கொன்று குட்டியொடு கிளைதோறும் ஆடும்.
திடுதிடென பேரருவி திமிராட்டம் போடும்
   திமுதிமென முகிலெதையோ தொலைத்ததுபோல் தேடும்.
அடடடடா வேறென்ன சுகமிருக்கக் கூடும்?
   அடுத்துங்கள் பயணத்தில் ஆப்பிரிக்கக் காடும்.



சடசடென மழையொன்று உடல்நனைத்துப் போகும்.
   சட்டென்று வெயில்வந்து தலைதுவட்டிப் போகும்.
தடதடென சிற்றோடை நீர்தளும்பிப் பாயும்
   தலைதூக்கும் மீன்கொத்த கொக்கெல்லாம் காயும்.
படபடென கிளிக்கூட்டம் படையெடுக்கும் வானை.
   படையோடு பவனிவந்து பயமுறுத்தும் யானை
கடகடென புறப்பட்டு ஆப்பிரிக்கா 
வாரீர்.
 கண்கொள்ளா காட்சிகளைக் காட்டுக்குள் பாரீர்.


                                                                                                             
சிவகுமாரன்


.

திங்கள், நவம்பர் 06, 2017

வலி


வண்டு துளைக்கையில்
வலி பொறுத்த
கர்ணனும்,
அம்புப் படுக்கையில்
அரற்றாத பீஷ்மனும்,
தசையறுத்துத்
தராசில் வைத்த
சிபியும்
சொல்லிக் கொடுக்கிறார்கள்
சூட்சுமம் ஒன்றை.
வலி தாங்குதலே
வலிமை என்று.

சருகை உதிர்த்த
மரத்தின் வலியும்
சிறகை உதிர்த்த
பறவையின் வலியும்
கண்டுணர
நீ
கவிஞனாக வேண்டியதில்லை.
காயம் படு போதும்.

                                                                                                                                                      
சிவகுமாரன்
06.11.2017

ஞாயிறு, ஜூன் 04, 2017

கபீரும் நானும் 35



तिनका कबहुँ ना निंदिये, जो पाँव तले होय ।
कबहुँ उड़ आँखो पड़े, पीड गहरी होय ॥

Tinka kabahu na nindiye, paav tale jo hoye
Kabahu udd aankho pade, peed gehri hoye

One should not abuse a blade of grass under one's feet.
If that happens to strike on one's eye then there will be terrific pain.

சிறுஉமி தனையும் "சீ"யென எண்ணி
    சிறுமை செய்யேல் மறந்து.
கருவிழி தொட்டு கண்ணை உறுத்தும்
    காற்றில் உமியது பறந்து.
-----------------------------------------------------------------------------------------------------------------31.

सब धरती कागद करूं , लिखनी सब बनराय ।
सात समुद्र का मसि करूं, गुरु गुण लिखा न जाय ॥

Sab dharthi kaagath karoon , ligni sab banrai
Saath samudhra kaa masi karoon gurugun ligha naa jaay.

Even if the whole earth is transformed into paper with all the big trees made into pens and if the entire water in the seven oceans are transformed into writing ink, even then the glories of the Guru cannot be written. So much is the greatness of the Guru.

கடலே மையாய் காகித நிலத்தில் 
   காட்டு மரத்தால் எழுது 
அடங்கா அதனில் ஆசான் பெருமை.
    அடிகள் பணிவாய் தொழுது .
---------------------------------------------------------------------------------------------------------------------32.


कबीर दर्शन साधु का, बडे़ भाग दरशाय ।
जो होवै सूली सजा, कांटे ई टरि जाय ॥


Kabir dharshan saadhu ka, bade baag dharshai
Jo hovey sooli sajaa, kaante eentari jaai.

It is our fortune to have a chance of meeting saints.
Even the injury by sword will be felt as the touch of a small thorn.


சத்திய ஞானியர் தரிசனம் பெற்றால்
    சகத்தினில் கிட்டும் பேறு .
கத்தியின் குத்தும் குறுமுள் வலிபோல்
     கணத்தில் மாறும் ஊறு .
---------------------------------------------------------------------------------------------------------------------33.

बकरी पात खात है ,ताकि माढी खाल 
जो बकरी को खात है , ताको कौन हवाल 

bakri path ghath hai thaaki maathi ghaal
jo bakri ko ghaath hai thaako koun havaal 

For mere eating leaves and grass the goat gets the punishment of slaughter.
What punishment the man will have who kills and eats the flesh of the goat?

இலையும் தழையும் தின்றதின் பாவம் 
    இறைச்சியாய் ஆனது ஆடு 
தலையை வெட்டி தின்ற உன்  பாவம் 
     தொலைப்பதுவோ பெரும் பாடு. .                
----------------------------------------------------------------------------------------------------------------------34.

चिड़ी चोंच भर लै गई ,नदी घटया ना नीर 
दान दिये धन ना घटै, कह गए दास कबीर 

Chidiya choch bhar le gayi, nathi ko ghatya naa neer
Dhaan dhiye dhan naa ghate , kahu gaye daas kabir.

A river will not have depletion of its water when a Sparrow flies away with a beakful of water.
Similarly one does not decrease his wealth by donating to poor.

குருவி தன் அலகால் கொத்திப் பருகிட 
        குறையுமோ நதியின் நீரும்?
இருப்பதில் கொஞ்சம் இல்லார்க் களித்தால் 
       ஏழையர் ஆவரோ யாரும் ?
----------------------------------------------------------------------------------------------------------------------35.
                                      
                                                                                                                                                                                                                                                                  ...........தொடரும் 

சமர்ப்பணம்:

பன்மொழி வித்தகர் கவிக்கோ அப்துல்ரகுமான் அவர்களுக்கு
 . 


சிவகுமாரன் 


செவ்வாய், பிப்ரவரி 14, 2017

காதல் வெண்பாக்கள் 56


போகும் உயிரைப் பிடித்திழுக்கும் ! நெஞ்சமது 
வேகும் வரையில் விடாதிருக்கும்! - தேகத்தில் 
பாதியாய் நின்றே பயணிக்கும் காடுவரை !
ஆதலினால் காதல் சுகம்.

ஊரே வெறுத்தாலும் விட்டு விலகாது !
யாரெதிர் வந்தாலும் நின்றெதிர்க்கும் - தீராத 
போதைதான் ஆனாலும் புத்தி பிறழாது !
ஆதலினால் காதல் சுகம். 

சிவகுமாரன்

ஈற்றடி தந்த நண்பர் விஜூ அவர்களுக்கு நன்றி.

செவ்வாய், ஜனவரி 31, 2017

கிளிஞ்சல் பொறுக்கிய நாட்கள்


என்னதான் நடந்தது
டைரியின்
எழுதப்படாத பக்கங்களில்?

நீக்கிவிடலாம்
நினைவில் நிற்காத
நாட்களை
ஆயுட்கணக்கிலிருந்து
அடியோடு.

தினசரிக் காலண்டரின்
நேற்றாய்
கிழித்தெறிந்து விடலாம்
முத்தெடுக்கும் ஆசையில்
கிளிஞ்சல் பொறுக்கிய
நாட்களை.

கனவிலும் சாதிக்காமல்
கடந்துசென்ற காலத்தை
எப்படிச்  சேர்ப்பது
கணக்கில்?

வாழ்ந்து முடிப்பதும்
முடிந்தவரை வாழ்வதுமே
வாழ்வெனில்,
இன்னொரு பிறப்பு
இருப்பது நிஜமெனில்
இறைவா படைத்துவிடு
ஈசலாய் .

சிவகுமாரன் 

செவ்வாய், ஜனவரி 24, 2017

கொம்பைத் தீட்டிடடா


எங்கள் தமிழினம் எங்கள் தமிழினம்
  என்றே முழங்கிடடா- இனி
  இதுதான் போரிடும் முறையென உலகம்
  எங்கும் வழங்கிடடா.
பொங்கு தமிழரின் போர்க்குணம் கண்டு
   புவியே மலைக்குதடா -மீண்டும்
   புறப்படு புறப்படு போரிட இன்னும்
   போர்க்களம் அழைக்குதடா.

வெற்றிகள் கண்டு மயங்கி விடாதே
   வேலை இருக்குதடா -நமை
   வீழ்த்திடு வோரை விரட்டி அடிக்கும்
   வேளை பிறக்குதடா.
சற்றும் தளர்ந்து நின்று விடாமல்
   சரித்திரம் படைத்திடடா -உன்
   சந்ததி காக்க செந்தமிழ் வாழ
   தடைகள் உடைத்திடடா.

இத்தனை காலம் பொறுத்தது போதும்
   எதிர்த்து நின்றிடடா - இனி
   எல்லாம் உன்னால் மாறும்! வீதியில்
   இறங்கி வென்றிடடா.
மொத்தமாய் மாறிட தாமதம் ஆகும்!
   முயன்றால் முடியுமடா. -கண்
   முன்னே நடப்பதை தட்டிக் கேட்க
   முடிந்தால் விடியுமடா.

உண்ணக் கொடுத்தவன் வறுமையில் உயிரை
   விடுதல் முறையாடா? -நாம்
   உண்டு களிக்க உழவர் தம்மின்
   உடல்கள் இரையாடா?
தண்ணீர் இன்றி தற்கொலை செய்யும்
   தரித்திரம் துடைத்திடடா -அதைத்
   தடுக்க இயலாத் தடைகள் எல்லாம்
   தகர்த்து உடைத்திடடா!

தலைவனும் வேண்டாம் தொண்டனும் வேண்டாம்
   தமிழே போதுமடா -நாம்
   தம்மைத் தாமே ஆண்டால் கட்சித்
   தலைகள் மோதுமடா.
கலைந்தபின் மறந்திட வேண்டாம்! நெஞ்சில்
   கனலை மூட்டிடடா -தமிழ்க்
   காளையே இன்னும் களம்பல காண
   கொம்பைத் தீட்டிடடா.
 

சிவகுமாரன்

வெள்ளி, ஜனவரி 13, 2017

உழன்றும் உழவே தொலை

கடவுள் என்பவன் கால வயலில் 
நடவு செய்ய நினைத்து ஒருநாள்
இந்த நிலத்தில் எறிந்த விதைகளில்
நந்த வனத்தில் விழுந்தவை சிற்சில.
மேட்டுப் புறத்தில் முளைத்தவை சிற்சில.
ரோட்டோ ரத்தில்  வளர்ந்தவை பற்பல.
காற்றின் கைகளில் சிக்கித் தவித்து
சேற்றுக் குள்ளே சிலவிதை மட்டும்
விழுந்தன அவையே உலகம் யாவையும்
எழுந்திடச் செய்யும் எங்கள் கூட்டம்.
நந்த வனமும்  மேட்டுப் புறமும்
எந்த சூழலில் இருந்த போதும்
சோற்றுக் காக ஒவ்வொரு வேளையும்
சேற்றை மட்டுமே நம்பிக் கிடக்கும்.
உழவர் நாங்கள் தின்ற மிச்சமே
உலகம் உண்ட காலமும் உண்டு.
புவியை ஏரால் புரட்டிப் போட்டு
கவிதை எழுதும் கலைஞர் நாங்கள்.
ஏர்முனைப்  பேனா எடுத்த நாங்கள்
கூர்மணற் காகிதம் குத்திக்  கிழித்து
எழுதிய கவிதைக்  கீடாய் எவரும்
எழுதிய தில்லை இல்லவே இல்லை.
இன்றோ..
சுழன்றும் ஏர்ப் பின்னது என்றோர்
கழன்று கொண்டார் காலப் போக்கில்.
எழுதிக்  கிழிக்க ஏர்முனை  இல்லை
உழுது விளைக்க காகிதம் இல்லை.
பச்சை வயல்கள் பட்டா வாகி
மச்சு வீடாய் மாறிப் போயின.
உழுது விளைத்த உழவு மாடுகள்
அழுது போயின அறுபட கேரளம்
பொட்டலாய்ப் போன பூமியை விட்டு
ஒட்டகம் மேய்க்க ஓடினர் பிள்ளைகள்

பிழைப்பைப் பற்றிக் கவலைகள் இல்லை
உழைக்க வேண்டிய அவசியம்  இல்லை.
தலையில் அடித்து தலைவர் சொன்னார்
ஏழைகள் நாட்டில் இருக்கும் வரையில் 
இலவசம் தொடரும் இலவசம் தொடரும்
செலவுகள் பற்றி சிந்தனை வேண்டாம்.
ரேஷனில் கொடுத்த இலவசம் வாங்கி
வாசலில் வைப்போம் வறட்டுப் பொங்கல்.
அடுத்த வருடம் இன்னும் வசதி 
அடுப்பு வேண்டாம் அரிசியும் வேண்டாம்
பாக்கெட் டுக்குள் பொங்கல் அடைத்து
தூக்கிக் கொடுப்பார் தங்கத் தலைவி.
அன்ன பூரணி அல்லக் கையாள் 
சின்னம் மாவின் சேவடி பணிந்து 
கொடுத்த கைக்கு நன்றிகள் கூறி
எடுத்து நக்கி ஏப்பம் விடுவோம்.
நல்லதாய் ஆப்பி(APP ) நாப்பதே எம்.பீ (MB)
ஜல்லிக் கட்டை டவுன்லோட் செய்வோம்.
வீடியோ கேமில் விரட்டிப் பிடித்து 
ஆடி மகிழ்ந்து அடங்கிப் போவோம் .
தைத் திருநாளா  தமிழர் திருநாள் ?
வைத்தான் ஆப்பு  வடக்குத் தலைவன் .
நாடு செழிக்க நல்லோர் வாழ 
வீடுகள் தோறும் விளக்குகள் ஏற்றுக.
எங்கள் வயிற்றில் எரியும் நெருப்பில் 
பொங்குக பொங்கல் பொங்கலோ பொங்கல்.   
சிவகுமாரன் 

ஞாயிறு, ஜனவரி 08, 2017

முரண்-டு -காளை




அடித்துக் கொல்லலாம்
அங்கம் அறுக்கலாம்.
தோலை உரித்து
தொழிலை வளர்க்கலாம்.
வெட்டிக் கூறிட்டு
வியாபாரம் செய்யலாம்.
வாங்கித் தின்று
வயிறு வளர்க்கலாம்.
கொம்பு சீவி 
குளிப்பாட்டி
மாலையிட்டு 
மணிகள்கட்டி
மந்தையில் விரட்டி
மகிழ்ந்து துரத்தி
தினவு ஏறிய
திமிலைப் பற்றி
ஆரத்தழுவி
ஆண்மைச் செருக்கில்
அடக்கி ஆளுதல்
.......……………………………
அய்யகோ அய்யகோ
அக்கிரமம் கொடுமை.
காட்டுமிராண்டிகள்
காட்டுமிராண்டிகள்.

சிவகுமாரன் 


வியாழன், டிசம்பர் 22, 2016

"தீ"ர்தல்



ஐந்தாண்டுக்கு ஒருமுறை 
தரப்படுகிறது 
ஆளுக்கொரு தீக்குச்சி .
எரிக்க வேண்டியதும் 
ஏற்ற வேண்டியதும் 
எவ்வளவோ இருக்க  
பற்றவைக்கப்படுகிறது
இலவசமாய்த் தரப்படும் 
ஒரு சிகரெட் 
அல்லது 
ஒரு மத்தாப்பு. 


சிவகுமாரன்

 

வெள்ளி, நவம்பர் 25, 2016

கபீரும் நானும் 30


हाथों परबत फाड़ते, समुन्दर घूट भराय ।
ते मुनिवर धरती गले, का कोई गरब कराय ॥

Haathon parbat faadte, samundar ghoont bharaye,
Te munivar dharthi gale, ka koi garab karaaye. 

A big mountain was lifted by hands and an ocean was packed in a jar.
The giants who made those world records are not alive 

மலையைத் தூக்கினான் ராவணன் - குடுவையில்
   மாநதி அடைத்தான் மாமுனி.
உலகே வியக்கும் சாதனை - செய்தும்
    உயிருடன் விட்டதா மேதினி?

-----------------------------------------------------------------------------------------------------------------26.

जब मैं था तब हरि नही, अब हरि है मैं नही ।
सब अंधियारा मिटि गया, जब दीपक देख्या मांहि ॥

Jab main thaa thab hari nahi, ab hari hai main nahi 
sab anthiyara miti gaya , jab dheepak dheka maahi 

When I was alive, HE was not there.HE came when I died. 
When there was sunshine , the darkness was found nowhere. 

நானங் கிருந்தேன் அவனங் கில்லை .
    நானிறந்த பின்வந்து நின்றான்.
வானம் கிழித்து வெய்யோன் வந்தபின் 
     வாட்டும் இருளோன் சென்றான் .

                             (மாற்று)

நானங் கிருந்தேன் இறையங் கில்லை .
      நான்மறைய  வந்தது இறையும் .
வானம் கிழித்து வெய்யோன் வந்ததும் 
      வாட்டும் இருளும் மறையும்.  
----------------------------------------------------------------------------------------------------------------27.

कबीर सीप समुद्र की, रहे प्यास प्यास ।
और बूँद को ना गहे, स्वाती बूँद की आस ॥

Kabir seep samuthra ki, rahe pyaas pyaas 
Aur boonth ko naa gahe , swathi boonth ki aas 

The real thirst is that of pearl shell.
Surrounding it, there is plenty of sea water,
but longing for drop from sky .

சிப்பியின் தாகமே தாகம் - விண்ணின் 
   சிறுதுளிக் கெனவே ஏங்கும் .
தப்பியும் கடல்நீர் தன்னை - தாகம் 
    தீரவோ தன்னுள் வாங்கும் ?
--------------------------------------------------------------------------------------------------------------28.

बुरा जो देखण में चला, बुरा न मिलिया कोए ।
जो मन खोजा आपणा, तो मुझ्से बुरा न कोए ॥

Bura Jo Dekhan Main Chala, Bura Naa Milya Koye
Jo Munn Khoja Apnaa, To Mujhse Bura Naa Koye

I searched for the crooked man, met not a single one
Then searched myself, "I" found the crooked one

கெட்டவன் யாரெனத் தேடிப் பார்த்தேன்.
   கெட்டவன் யாரும் இல்லை.
எட்டிநான் ஒருகணம் என்னுள் பார்த்தேன்.
   எனைவிடக் கெட்டவன் இல்லை.
-----------------------------------------------------------------------------------------------------------------29.

चिउंटी चावल ले चली, बिच में मिल गई दाल ।
कहैं कबीर दो न मिलै, इकले दूजी डाल ॥

Chivundi chaval le chali,beech mein  mil gayi dhaal 
kahe kabir dho na milay iklay dhuji daal.

An ant can carry a single rice.
If it likes the grain in its way, it will loose both

உடலின் வலுவால் ஒற்றை எறும்பு
    ஒரேயொரு அரிசியை இழுக்கும்.
இடையில் காணும் இன்னொரு பருப்பின்
       இச்சையால் இரண்டையும் இழக்கும்.
-----------------------------------------------------------------------------------------------------------------30.
....தொடர்வோம் 

சிவகுமாரன்