வெள்ளி, நவம்பர் 19, 2010

சிலம்பின் புலம்பல்


கண்ணகி பேசுகிறேன் கண்ணீரால் விழியிரண்டும்
புண்ணாகிப்    போனகதை புலம்பித் தீர்க்கின்றேன்  


ஆதிக்க ஆணுலகின் ஆங்காரப்  போக்குகளால்
பாதிக்கப் பட்டமகள் பாடிப் புலம்புகிறேன்


மாசறு பொன்னென்றும் வலம்புரி முத்தென்றும்  
ஆசை மொழிகேட்டு அறிவிழந்து நான்போனேன்


கட்டிய கணவன் கைவிட்டுப் போனபின்னும்
தட்டிக் கேட்கவில்லை தலைவிதியை நொந்திருந்தேன்


தாலிமட்டும் கட்டிவிட்டு தவிக்கவிட்டுச்  சென்றவனை
வாலிபத்தின் முறுக்கேறி வரம்பின்றி அலைந்தவனை 


ஏனென்று ஒருவார்த்தை எதிர்த்தன்று கேட்டிருந்தால் 
நானென்றோ சரித்திரத்தில் இடம்மாறி போயிருப்பேன்


ஆடிய மாதவியின் அழகில் மனம்மயங்கி
ஓடிய கோவலனை ஒருவார்த்தை கேட்கவில்லை


வேல்விழியை மறந்துவிட்டு வேறொருத்தி பின்னாலே
கால்கள் தடுமாறியென் கணவன் சென்றபோது


நில்லென்று ஒருவார்த்தை நிற்கவைத்து அவனிடமே
சொல்லொன்று தாலிக்குச்  சொல்லிவிட்டுப் போவென்று


கொஞ்சம் மனந்துணிந்து கோபமாய்க் கேட்டிருந்தால்
நெஞ்சின் நெருப்பலைகள் கொஞ்சம் குறைந்திருக்கும்


ஆனால்.....


கற்பரசி பட்டமிந்த கண்ணகிக்கு கிடைக்காது.
சொற்கோ இளங்கோவும்  சொல்லாமல் விட்டிருப்பான்.


எல்லாத் துயர்களையும்  ஏற்றுத்தன்   இதயத்தைக் 
கல்லாக்கிக் கொண்டதினால்  கற்பரசி எனச்சொன்னார்.


வாயில்லாப் பூச்சியென வாழ்ந்திருந்த காரணத்தால்
தாய்க்குலமும் எனையின்று தலைவணங்கிச் செல்கிறது.


வீசப் பட்டபோது வேதனையைத் தாங்கியதால்
பேசப் பட்டேன்நான் பெண்கள் திலகமென.


நாயாக வாலாட்டி நானிருந்த காரணத்தால்
வாயார எனக்கின்று  வாழ்த்துப்பா  பாடுகிறார் .


தன்மானம் இல்லாமல் தலைகுனிந்து வாழ்ந்தால் தான்
பெண்மானம் இவ்வுலகில் பேசப் படுமன்றோ !


பெண்ணடிமைக் கொடுமைக்கு பெரியதொரு சான்றாக
என்னைப்போல் இன்னொருத்தி இவ்வுலகம் கண்டதில்லை.


காவியத்தில் இடம்பெற்றேன், கட்டியவன் இதயத்தில்
ஓவியமாய் வாழ்ந்தேனா? ஓர்நாளும் மகிழ்ந்தேனா ?


மாதவிக்கு மேகலையை மகிழ்வோடு தந்தானே
ஆதரவாய் எந்தனுக்கு அணுவேனும் தந்தானா ? 


வசந்த காலத்தில் வாழ்க்கையைத் தொலைத்தவன்
கசந்த காலமிந்தக்  கண்ணகியைத் தேடி வந்தான்.


வேசியின் வலையிலே வீழ்ந்து கிடந்தவன்
காசின்றிப் போனதுமென் கால்களை நினைத்திட்டான்.


அன்பை அவளுக்கு அள்ளிக் கொடுத்தவன்
துன்பம் வந்ததுமென் துணைகேட்டு ஓடிவந்தான்.


மற்ற நகைவிற்று மானத்தைத் தொலைத்தவன்
ஒற்றைச் சிலம்புக்கு உயிரைப் பறிகொடுத்தான்,


காற்சிலம்பு மட்டுமெந்தன் கைவசத்தில் இல்லையெனில்
ஊர்ச்சந்தை தனிலென்னை விற்றிருப்பான் யார்கண்டார் ?


யார்மீது நான்கொண்ட அடங்காத கோபத்தால்
மார்பைத் திருகியந்த மதுரைக்குத் தீவைத்தேன் ?


கோவலன் மீதிருந்த கோபத்தை மாமதுரைக்
காவலன் மேல்தானே காட்டநான்  முடிந்தது.


எனக்குள்ளே பலகாலம் எரிந்துவந்த நெருப்பன்றோ
சினம்கொண்டு ஊரையே சுட்டெரித்துப் போட்டது !


மங்கையரில் எனைமட்டும் மாணிக்கம் எனச்சொல்லும்
தங்கையரே என்பேச்சை தட்டாமல் கேளுங்கள்.


மண்ணில் அதுவுமிந்த மாநிலத்தில் நாமெல்லாம்
பெண்ணாகப் பிறந்துவிட்ட பெரும்பாவக் குற்றத்தால்,


அழுகைத் தண்டனையை அனுபவிப்பது தானா 
எழுதப்  படாத  இ.பி.கோ.  நமக்கெல்லாம் ?


அச்சம் மடம் நாணம் அத்தனையும் நெஞ்சத்தின்
உச்சத்தில் இருக்கட்டும் ! உரிமையினை இழக்காதீர்!


பரத்தையரை நாடுகின்ற பாவியரின் செயல்கண்டு
சிறுத்தையென சீறுங்கள் : சீயென்று தள்ளுங்கள்.


கற்பென்னும் முள்வேலி கன்னியருக்(கு) உண்டென்றால்
அற்பமான ஆணென்ன அவிழ்த்துவிட்ட வெள்ளாடா ?


ஊரெல்லாம் மேய்ந்துவிட்டு உடலோய்ந்து வருபவனை
சீராட்ட நாமென்ன செஞ்சிலுவைத் தாதிகளா ?


வக்கில்லா ஆணுக்கு வாழ்க்கைப் பட்டுதினம்
செக்கிழுக்கும் மாடுகளாய் செத்துவிழப் பிறந்தோமா ?


ஓட்டுக்குள் உடல்சுருக்கி உயிர்வாழும் ஆமையென 
வீட்டுக்குள்  நாளெல்லாம் வெந்துவிழப் பிறந்தோமா ?


அடங்கிக் கிடப்பதற்கும் அடிமையென வாழ்வதற்கும்
முடங்களா நாமெல்லாம் ? முகங்கள் நமக்கிலையா ?


ஆடவனுக் கொருநீதி அளிக்கிக்ன்ற தேசத்தின்
கேடுகெட்ட சட்டங்கள் கிழிந்தொழிந்து  போகட்டும்.


பெண்ணினத்தை அடிமையென்னும் பேய்க்கூட்ட வாதங்கள்
மண்ணுக்குள் மண்ணாகி மட்கட்டும் ! மாளட்டும் !


அறைக்குள்ளே அடிமைகளாய் அடைபட்டுக் கிடப்போர்கள்
சிறைக்கதைவை உடைத்தெறிந்து சிறகுதனை விரிக்கட்டும்.


விரிக்கும் சிறகுதனை வெட்டத் துடிப்போர்கள்
எரிக்கும் நெருப்புக்கு இரையாகிப் போகட்டும்.


மதுரைக்கு நான்வைத்த மார்பகத்து நெருப்பின்னும்
கொதிப்போ டிருக்கிறது, கொளுத்துங்கள் பாவிகளை.

                                                                              ---- கண்ணகி  

62 கருத்துகள்:

சிவகுமாரன் சொன்னது…

இன்னும் பேசியிருப்பாள் கண்ணகி. நான்தான் ஆர்டர் ஆர்டர் என மேசையில் தட்டி அமர வைத்துவிட்டேன் . இனி எதிர்தரப்பு தன் வாதங்களை எடுத்து வைக்கலாம்.

ம.தி.சுதா சொன்னது…

////ஏனென்று ஒருவார்த்தை எதிர்த்தன்று கேட்டிருந்தால்
நானென்றோ சரித்திரத்தில் இடம்மாறி போயிருப்பேன்////
ஆமாம் அருமையாக இருக்கிறது.. வாழ்த்துக்கள்..

Nagasubramanian சொன்னது…

nice!

logu.. சொன்னது…

great..

பெயரில்லா சொன்னது…

அருமை சிவா..
உங்கள் தமிழ் மெய் சிலிர்க்க வைக்கிறது..
தொடரட்டும் உங்கள் கவிதை..

என்னது நானு யாரா? சொன்னது…

கவிதை வரிகள் அருமை நண்பா!

இன்னமும் கண்ணகிகள் பிறக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் பூவிற்கும் பொட்டிற்காகவும், தங்கத்திற்காகவும், அலங்காரங்களுக்காகவும், ஆடை ஆபரணங்களுக்காகவும் ஏங்கி கனவுக்கண்டுத் தூங்கி... காலமெல்லாம் ஆண் தான் தனக்கு பாதுகாப்பு என்று திருமண பந்தத்திற்குள் பலி இடப்போகும் வெள்ளாடுப் போன்று செல்ல மனதளவில் தயாராகி, அப்படி தயாராகவில்லையென்றால் பிற பெண்களால் தயாராக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றாள். பொருளாதார சுதந்திரம் மட்டும் அல்ல. இந்த பெண்களுக்கு பாலியல் சுதந்திரமும் தந்தாக வேண்டும். அப்போது தான் அவளின் கழுத்து நெருக்கப்படாமல் இருக்கும்.

பெண்களின் குமுறல்களை சொல்லிய கவிதைக்கு நன்றிகள் பலப்பல!

செல்வா சொன்னது…

//நாயாக வாலாட்டி நானிருந்த காரணத்தால்
வாயார எனையின்று வாழ்த்தி பாடுகிறார் ./

சத்தியமா எனக்கு என்ன சொல்லுறதுனே தெரியலைங்க .. கலக்கிட்டீங்க . இந்த வார்த்தை பத்ததாது ஆனா வேற வார்த்தை எனக்குத் தெரியல .. எல்லா வரிகளுமே வாய்ப்பே இல்ல ..!! நல்லா இருக்குங்க .

பெயரில்லா சொன்னது…

//நாயாக வாலாட்டி நானிருந்த காரணத்தால்
வாயார எனையின்று வாழ்த்தி பாடுகிறார் .//

கோபத்தின் உச்சம்.

Unknown சொன்னது…

அருமை.

// பெண்ணடிமைக் கொடுமைக்கு பெரியதொரு சான்றாக
என்னைப்போல் இன்னொருத்தி இவ்வுலகம் கண்டதில்லை //

"மாத்தியோசி"-க்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த கவிதை.

வினோ சொன்னது…

அருமை அருமை நண்பரே....

நிலாமதி சொன்னது…

பெண்ணடிமை தனத்துக்கு எதிரான் ஆக்ரோஷமான கவிதைஅருமை அருமை. பாரட்டுக்கள.

Unknown சொன்னது…

கொளுத்துங்கள் பாவிகளை

well said, final punch

kashyapan சொன்னது…

வாருங்கள் சிவகுமரன்! விஸ்வரூபமெடுத்துவிட்டீர்கள். வாழ்த்துக்கள்---காஸ்யபன்.

அப்பாதுரை சொன்னது…

அருமை.

(விரியும் | எரியும் என்றிருந்திருக்கலாமோ? அல்லது விரிகின்ற | எரிகின்ற?)

Ananthi (நெல்லை அன்புடன் ஆனந்தி) சொன்னது…

//தன்மானம் இல்லாமல் தலைகுனிந்து வாழ்ந்தால் தான்
பெண்மானம் இவ்வுலகில் பேசப் படுமன்றோ !//

..........எந்த வரிகளை சொல்வது, எதை விடுவதுன்னே தெரியலங்க..

அட்டகாசமான வரிகள்.. பெண்ணடிமையை எதிர்த்து உங்க வரிகள் சீரிய விதம் சூப்பர்.......!!!!

வாழ்த்துக்கள்..!

"ராஜா" சொன்னது…

பெண்களுக்காக பரிந்து பேசும் ஆண்கள் இங்கு மிக குறைவு ... அப்படிப்பட்ட ஒரு மனிதரை இன்று அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி ...

மோகன்ஜி சொன்னது…

சிவகுமாரன்! உங்கள் சிலம்பின் ஒலி காதுகளில் ரீங்கரித்துக் கொண்டு இருக்கிறது. வாழ்த்துக்கள் !

Praveenkumar சொன்னது…

MIGAVUM ARUMAIYANA VARIKAL. KANNAGIYE VANDHU SONNATHAI PONDRA ORU UNARVU. SUPER SIVAKUMAR NANPAREY. (sorry. cell phone la irundhu commend poten athan english)

தமிழ் சொன்னது…

அருமை (சொல் வளம் சிறப்பு)

Thenammai Lakshmanan சொன்னது…

மிக அருமை.. சிவா

பெயரில்லா சொன்னது…

அருமை சிவா
தங்கள் தமிழுக்கு என் உள்ளம் சிலிர்கிறது
தொடரட்டும் உங்கள் காவிய பயணம் ....
நானும் உங்களுடன் தங்கள் ரசிகையாய்!!!!!!

சிவகுமாரன் சொன்னது…

நன்றி சுதா. நாகா, லோகு பாலா, என்னது நானு யாரா, செல்வகுமார். இளமுருகா, இந்திரா, வினோ, நிலாமதி, விக்கி உலகம், காஷ்யபன், ஆனந்தி, மோகன்ஜி, ராஜா, தேனம்மை, திகழ், பிரவீன் & கல்பனா,
......@ அப்பாத்துரை
விரியும் என்பது தானாய் நடப்பது. மலர்களின் இதழ்கள் மாதிரி. விரிக்கின்ற என்பது முயன்று நடப்பது. முட்டி மோதி முட்டையை உடைத்து தத்தி தத்தி சின்னச் சிறகை விரிக்க வேண்டியது குஞ்சுவின் முயற்சி. பெண்ணுரிமைச் சிறகுகள் தானே விரிவதில்லை.
நன்றி நண்பரே.
சிந்தனையை தூண்டிய உங்கள் பின்னூட்டத்திற்கு.

வால்பையன் சொன்னது…

முரண்படுகிறேன் நண்பா!

கண்ணகி பாத்திரம் எங்கேயும் கோவலனின் செயலுக்காக வருத்தப்பட்ட மாதிரி சித்தரிக்கபட வில்லை!
ஆணாதிக்க சமூகத்தால் சித்தரிக்கபட்ட பாத்திரம் அது!

மதுரையை எரித்ததை நியாயபடுத்திருக்கும் கடைசி வரிகள் சரி என்று நீங்கள் ஒப்பு கொண்டால், கண்ணகியின் புலம்பல்களை ஏற்றுக்கொள்ளக்கூடாது!

புலம்பும் பாத்திரம் கண்ணகி என்றால் எரிந்திருக்க வேண்டியது கோவலன், முன்னரே!

சிவகுமாரன் சொன்னது…

இல்லை, நண்பா. இந்தக் கண்ணகி இளங்கோவடிகள் படைததவளில்லை. என் கற்பனையில் உதித்தவள். அவளை எங்கேய்யா அப்போது பேச விட்டார்கள் ?

"இது பொறுப்பதில்லை - தம்பி

எரிதழல் கொண்டு வா

கதிரை வைத்திழந்தான் - அண்ணன்

கையை எரித்திடுவோம்"

என்று பாரதியின் பீமன் தான் சொன்னான். வியாசரும் வில்லிப்புத்தூராரும் படைத்த தர்மனின் தம்பிகள் அண்ணனை எதிர்த்து பேசாதவர்கள்.

காவியம் பாடிய பாரதியே இடையில் புகுந்து தனது மனக்குமுறலை பீமனின் பாத்திரத்தின் மீது ஏற்றிக் கூறும் பொழுது, கற்பனைக் கண்ணகியின் வாயிலாக நான் பேசக் கூடாதா ?

பத்மநாபன் சொன்னது…

சாம்பலினுள் கனறும் நெருப்பு , வீச்சம் கொண்டு சுழலும் தீயாக உங்கள் வார்த்தைகளில் ஜொலித்து எரிய காண்கிறேன்.....

ADMIN சொன்னது…

ஒவ்வொரு கவிதையும் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கிறது நண்பரே..!

வார்த்தை ஜாலங்களில் வாசகர்களை வசீகரிக்க வைத்திருக்கிறீர்கள்!

மிக்க நன்றி! வாழ்த்துக்கள்..!

குறையொன்றுமில்லை. சொன்னது…

கிளைகளை பலரும் கிள்ளி விடுவதால்
என்னில் வேர்கள் மட்டுமே வளர்ந்து
கொண்டிருக்கின்றன.
நான்மிகவும் ரசித்த வரிகள்.
நல்ல பதிவு. வாழ்த்துக்கள்

sakthi சொன்னது…

well said!!

பெயரில்லா சொன்னது…

I am Ravi.

well done. amazing....
but my humble suggestion

"வேசியின் வலையிலே வீழ்ந்து கிடந்தவன்
காசின்றிப் போனதுமென் கால்களை நினைத்திட்டான்."

Please dont call MADHAVI as Vesi...
madhavi must be treated as Kannagi..

Ilango's wrote like that..if we think like that Tamil literature will never forgive us...

Well try. (Sorry i dont know how to type in Tamil)

சிவகுமாரன் சொன்னது…

தங்கள் வருகைக்கு நன்றி ரவி. இது கற்பனை தானே. ஒரு பெண்ணின் பார்வையில் தன கணவனை பங்கு போடும் எவளோருத்தியும் வேசி தான். எந்தப் பெண்ணையாவது கண்ணகியாய் தன்னை பாவித்து மாதவியின் செயல் சரி என்று சொல்ல சொல்லுங்கள் பார்ப்போம். ஒரு பெண்ணின் மன நிலையிலிருந்து இந்தக் கவிதையை பாருங்கள் வலியும் வேதனையும் புரியும். இளங்கோவடிகள் மாதவியை உயர்த்திச் சொன்னது பரத்தையரை ஆண்மகன்கள் கூடுவது தவறல்ல என்னும் ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு தான்.

prakash சொன்னது…

ungal kavithaikal supper

சிவகுமாரன் சொன்னது…

நன்றி பிரகாஷ்.
( நீங்கள் எந்த பிரகாஷ் )

prakash சொன்னது…

Annan, silambin pulambal kavithai supper annan
--i am ava. prakash

prakash சொன்னது…

anna,
ungal pakthi padalkal intha inaiyathil unda,
ungal anaithu kavithaikalin thoguppum ithil idamperuma

param சொன்னது…

அருமையான கவிதை! காலங்கள் கடந்தாலும் என்னால் இந்தக் கவிதையை மறக்க முடியாத அளவுக்கு என் மனதில் ஆழமாக பதிந்து விட்டது சிவாகுமாரன்.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி சகோதரி. வந்தோம் வாசித்தோம் என்றில்லாமல் தேர்ந்தெடுத்து வாசித்து, ஒரு சிறந்த கவிதைக்கு வாழ்த்து சொன்ன தங்களுக்கு நன்றி நன்றி.

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

இன்று 20.06.2012 வலைச்சரத்தில் தங்களின் இந்தப் படைப்பைப்பற்றி, செல்வி நுண்மதி அவர்களால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நல்ல கவிதை சார் ! என் வேண்டுகோளுக்கிணங்க Email Subscription வைத்ததற்கு நன்றி ! Email Subscribe செய்து விட்டேன்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஆடவனுக் கொருநீதி அளிக்கிக்ன்ற தேசத்தின்
கேடுகெட்ட சட்டங்கள் கிழிந்தொழிந்து போகட்டும்.


பெண்ணினத்தை அடிமையென்னும் பேய்க்கூட்ட வாதங்கள்
மண்ணுக்குள் மண்ணாகி மட்கட்டும் ! மாளட்டும் !

சிலம்பும் புலம்பும் அறச்சீற்றம் மிக்க வரிகள் !

vasan சொன்னது…

க‌விதையின் ஒவ்வொரு சொல்லும்,
ம‌துரை பாண்டிய‌ன் ச‌பையில், உடைத்து சித‌றி ம‌ன்ன‌ன் உத‌ட்டைச் சுட்ட‌
சில‌ம்பின் மாணிக்க‌ 'எரி' க‌ற்க‌ள்.

/கற்பென்னும் முள்வேலி கன்னியருக்(கு) உண்டென்றால்
அற்பமான ஆணென்ன அவிழ்த்துவிட்ட வெள்ளாடா ?

ஊரெல்லாம் மேய்ந்துவிட்டு உடலோய்ந்து வருபவனை
சீராட்ட நாமென்ன செஞ்சிலுவைத் தாதிகளா? /

ஆகா! எழுத நினைத்து வ‌ந்த‌ எழுத்தா?
நினைத்து, நெஞ்ச‌ம் ந‌னைத்து வ‌ந்த‌ துளிக‌ள்.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி வைகோ சார்.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி தனபாலன் சார். தங்கள் வேண்டுகோள் அல்ல அது. எனக்கு செய்த உதவி. நன்றி

சிவகுமாரன் சொன்னது…

நன்றி ராஜேஸ்வரி மேடம். தங்களைப் போறோரைக் கவரும் வகையில் இன்னும் பல கவிதைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. உதாரத்திற்கு எட்டி உதை என்னும் கவிதை. தேடிப் படித்து கருத்திடுங்கள் மேடம்.

சிவகுமாரன் சொன்னது…

நன்றி வாசன். சார். தங்களை வரவழைத்த வலைச்சரத்துக்கும் என் நன்றிகள்.

பெயரில்லா சொன்னது…

PURATCI KAVIKKU VAAZHTHUKKAL

Iniya சொன்னது…

என்றும் மறக்க முடியாத ஒரு கவிதை நியாயமான உண்மையான புலம்பல் கண்ணகியின் கோபம் உச்சக் கட்டத்திற்கு போனது தானே மதுரை எரிப்பு. அது உள்ளக்குமறலின் கொந்தளிப்பு தானே.எதை என்று எடுப்பேன் அத்தனையும் முத்துக்களே.
திரும்ப திரும்ப வாசித்து மகிழ்ந்தேன்.ஒரு ஆணாக இருந்து கொண்டு பெண் உணர்வை புரிந்து வடித்த புலம்பலுக்கு உண்மையில் தலை வணங்குகிறேன்.
நன்றி வாழ்த்துக்கள் ....!

சிவகுமாரன் சொன்னது…

நன்றி பெயரில்லா நண்பரே .
நன்றி இனியா. தேடிபிடித்துப் படித்து கருத்திட்டமைக்கு.

ஊமைக்கனவுகள் சொன்னது…

அண்ணா,
வணக்கம்.
உங்கள் கவிதையில் கவியரங்கக் கவிதையின் சாயலை அவதானிக்கிறேன்.
அதனால் வரிகளுக்குக் கிடையிலான கைதட்டுகள் என் காதில் மோதுகின்றன.
நானும் ஒருவனாய் அதன் பலவரிகளுக்குக் கைதட்டிப்போகாமல் என்ன செய்வேன்?
தங்களைப் போல் அறியப்படா ஆளுமைகள் எத்தனை பேரோ அண்ணா?

தவறாக நினைக்க மாட்டீர்கள் என்றால் ஒரு சின்ன சூக்குமம்...

வேல்விழியை மறந்துவிட்டு வேறொருத்தி பின்னாலே
கால்கள் தடுமாறியென் கணவன் சென்றபோது

மற்ற வரிகளுடன் இவ்வரிகளின் ஈற்றுச்சீரின் ஓசை சற்று அகல்வதை கவனித்தீர்களா அண்ணா?
அது நிரை நடுவணதாகிய காய்ச்சீர் “விளாம்“ என நிற்றலால் நேர்வது!
இதை விளம் ஆக்கினால் ஓசை உடன்படும்.

அதிகப்பிரசங்கித்தனமாக சொல்கிறான் என்று நினைத்துவிட மாட்டீர்கள் தானே?
நன்றி

சிவகுமாரன் சொன்னது…

சரியாய்ச் சொன்னீர்கள். விஜூ. இந்த வரிகள் மட்டுமல்ல நிறைய வரிகள் நீண்டு போயிருக்கின்றன. மேடையில் வாசித்த கவிதை இது ( மிகச் சரியாய் அவதானித்திருக்கிறீர்கள்) . பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் போது எழுதியது. வரிகள் நீண்டதோ குறுகியதோ தெரியாமல் நீட்டிமுழக்கி வாசித்து சமாளித்து விடுவேன். அப்போது எழுதியது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். சுட்டிக்காட்டியதற்கு நன்றி விஜூ.

Unknown சொன்னது…

அருமை ! அருமை ! அருமை !

Unknown சொன்னது…

வேல்விழி யைமறந்து வேறொருத்தி பின்னாலே
கால்கள் தடுமாறி யென்கணவன் சென்றபோது

Unknown சொன்னது…

ஒரு விகற்ப இன்னிசை வெண்பா ..

பற்றுகொஞ்சம் தித்திக்கும் செந்தமிழ் மீதிருக்கத்
தொற்றியதோர் ஆசையில் முற்றிலும் யாப்புநான்
கற்பதற்குள் மற்றொருவர் சொற்றொடரில் உள்ளபிழை
உற்றுநோக்கின் குற்றமா மோ

Unknown சொன்னது…

I made an attempt to give your thought a little changes to make it grammatically correct. I am posting it as my comment here below.

Unknown சொன்னது…

கண்ணகி பேசினால் என்ன பேசுவாள் ?
1. கண்ணகி பேசுகிறேன் கண்ணீரால் கண்ணிரண்டும்
புண்ணாகிப் போன கதைபுலம்பித் தீர்க்கின்றேன்
2. ஆதிக்க ஆணுலகின் ஆங்காரப் போக்குகளால்
பாதிக்கப் பட்டமகள் பாடிப் புலம்புகிறேன்
3. மாசறுபொன் னென்றும் வலம்புரி முத்தென்றும்
ஆசை மொழிகேட் டறிவிழந்து நான்போனேன்
4. கட்டிய என்கணவன் கைவிட்டுப் போனபின்னும்
தட்டிக்கே ளாமல் தலைவிதியை நொந்திருந்தேன்
5. தாலிமட்டும் கட்டித் தவிக்கவிட்டுச் சென்றவனை
வாலிபமு றுக்கில் வரம்பின் றியலைந்தவனை
6. ஏனென்றோர் வார்த்தை எதிர்த்தன்று கேட்டிருந்தால்
நானென்றோச ரித்திரத் தில்இடம்மா றிப்போயிருப்பேன்
7. ஆடிய மாதவி யின்அழ கில்மனம்மயங்கி
ஓடிய கோவலனை ஓர்வார்த்தை கேட்கவில்லை
8. வேல்விழி யைமறந்து வேறொருத்தி பின்னாலே
கால்கள் தடுமாறி யென்கணவன் சென்றபோது
9. நில்லென்று ஓர்வார்த்தை நிற்கவைத்துக் கோவலனை
சொல்லொன்று தாலிக்குச் சொல்லிவிட்டுப் போவென்று
10. கொஞ்சம் மனந்துணிந்து கோபமாய்க் கேட்டிருந்தால்
நெஞ்சின் நெருப்பலைகள் கொஞ்சம் குறைந்திருக்கும்
ஆனால்.....

Unknown சொன்னது…

11.கற்பரசி பட்டமிந்த கண்ணகி பெற்றிறாளே.
சொற்கோ இளங்கோவும் சொல்லாமல் விட்டிருப்பான்.
12. எல்லாத் துயர்களையும் ஏற்றென் இதயத்தைக்
கல்லாக்கிக் கொண்டதினால் கற்பரசி என்றுசொன்னார்.
13. வாயில்லாப் பூச்சியென வாழ்ந்திருந்த காரணத்தால்
தாய்க்குலமும் என்னையின் றும்தலைவணங்கிச் செல்கிறது.
14. வீசெறியப் பட்டபோது வேதனையைத் தாங்கியதால்
பேசப் படுகின்றேன் பெண்கள் திலகமென.
15. நாயாக வாலாட்டி நானிருந்த காரணத்தால்
வாயா ரயெனையின்று வாழ்த்துப்பா பாடுகிறார் .
16. தன்மானம் இன்றித் தலைகுனிந்து வாழ்ந்தால்தான்
பெண்மானம் இவ்வுலகில் போற்றப் படுமன்றோ !
17. பெண்ணடி மைக்கொடுமைக்கு பேரொரு சான்றாக
என்னைப்போல் இன்னொருத்தி இவ்வுலகம் கண்டதில்லை.
18. காவியத்தில் ஓர்இடம்பெற்றேன், கட்டியவ னின்இதயத்தில்
ஓவியமாய் வாழ்ந்தேனா? ஓர்நாளே னும்மகிழ்ந்தேனா ?
19. மாதவிக்கு மேகலை யைமகிழ்வோடு தந்தானே
ஆதரவாய் எந்தனுக்கு ஓர்அணுவேனும் தந்தானா ?
20. வசந்தகா லத்தில்வாழ்க் கையைத் தொலைத்தான்
கசந்தகாலத் தில்இந்தக் கண்ணகியைத் தேடியேவந்தான்.

Unknown சொன்னது…

21. வேசி வலையினில் வீழ்ந்து கிடந்தவன்
காசின்றிப் போனதுமென் கால்கள் நினைத்திட்டான்.
22. அன்பை அவளுக்கு அள்ளிக் கொடுத்தவன்
துன்பம் வரும்பொழு தென்துணைகேட்டு ஓடிவந்தான்.
23. மற்ற நகைவிற்று மானம் தொலைத்தவன்
ஒற்றைச் சிலம்பில் உயிரைப் பறிகொடுத்தான்,
24. காற்சிலம்பு மட்டுமெந்தன் கைவசத்தில் இல்லையெனில்
ஊர்ச்சந்தை யில்லென்னை விற்றிருப்பான் யார்கண்டார் ?
25. யார்மீது நான்கொண்ட தாளாத கோபத்தால்
மார்பைத் திருகி மதுரைக்குத் தீவைத்தேன் ?
26. கோவலன் மீதிருந்த கோபத்தை மாமதுரைக்
காவலன் மேல்தானே காட்ட முடிந்தது.
27. எனக்குள்பல் லாண்டு புகைந்த நெருப்பு
சினம்கொண்டு ஊரையே சுட்டெரித்துப் போட்டது !
28. மங்கையரில் என்னைமட்டும் மாணிக்கம் என்றுசொல்லும்
தங்கையரே என்பேச்சை தட்டாமல் கேளுங்கள்
29. மண்ணில் அதுவுமிந்த மாநிலத்தில் நாமெல்லாம்
பெண்ணாய் பிறந்துவிட்ட ஓர்பாவக் குற்றத்தால்,
30. அழுகையே தண்டனை யாய்அனுபவிப்ப தொன்றே
எழுதப் படாத இ.பி.கோ. நமக்கெல்லாம் ?

Unknown சொன்னது…

31. அச்சம் மடம்நாணம் அத்தனையும் நெஞ்சத்தின்
உச்சத் திலிருக்கட்டும் உம்உரிமையினில் ஒன்றுமிழக்காதீர்
32. பரத்தையரை நாடுகின்ற பாவியரங் கம்மேல்
சிறுத்தையென சீறுங்கள் : சீயென்று தள்ளுங்கள்.
33. கற்பென்னும் முள்வேலி கன்னியருக் குண்டென்றால்
அற்பமான ஆண்அவிழ்த்து விட்டவெள் ளாடா ?
34. ஊரெல்லாம் மேய்ந்துவிட்டு ஓய்ந்தொரு நாள்வருபவனை
சீராட்ட பெண்ணென்ன செஞ்சிலுவைத் தாதிகளா ?
35. வக்கில்லா ஆணுக்கு வாழ்க்கைப்பட் டேதினமும்
செக்கிழுக்கும் மாடுகளாய் செத்துவீ ழப்பிறந்தோமா ?
36. ஓட்டிற்குள் உள்ளடங்கி யேவுயிர்வாழும் ஆமையென
வீட்டிற்குள் நாளெல்லாம் வெந்துவீ ழப்பிறந்தோமா ?
37. அடங்கிக் கிடப்பதற் கும்அடிமையென வாழும்
முடங்களா நாமெல்லாம் ? ஓர்முகங் கள்நமக்கிலையா ?
38. ஆடவனுக்கோர் நீதிய ளிக்கிக்ன்ற தேசத்தின்
கேடுகெட்ட சட்டங்கள் சுக்குநூறாய் போகட்டும்.
39. பெண்ணினத் தையடிமையென்ற பேய்க்கூட்ட வாதங்கள்
மண்ணுக்குள் மண்ணாகி மட்கட்டும் ! மாளட்டும் !
40. அறைக்குள் ளடிமைக ளாய்அடைபட் டுள்ளோர்
சிறைக்கத வைஉடைத்தெறிவார் ஈர்சிறகு கள்விரிக்கட்டும்.
41. விரிக்கும் சிறகுதனை வெட்டத் துடிப்போர்
எரிக்கும் நெருப்புக்குள் சாம்பலாகிப் போகட்டும்.
42. மாமதுரைக் கன்றுவைத்த மார்பகத் தின்நெருப்பின்றும்
தாவென்று கேட்கிற தேகொளுத்துங் கள்பாவிகளை

சிவகுமாரன் சொன்னது…

மிக்க நன்றி அய்யா.
நான் இலக்கணம் முறையாகக் கற்றவனில்லை.
ஆர்வ மிகுதியில், அதுவும் எனது இளமைப் பருவத்தில் எழுதியது இது.
நன்றி.

சிவகுமாரன் சொன்னது…

Thank you sir

சிவகுமாரன் சொன்னது…

Thank you sir

VADIVELAN சொன்னது…

Arumai

Unknown சொன்னது…

true