செவ்வாய், ஆகஸ்ட் 31, 2010

எப்போது வருவாய்?

உன்
காதல் கணைகள் பட்டுத் தெறித்து
என்
கவிதைக் கிறுக்கல் கசக்கி எறிந்து
குப்பைக்கூளமாய் ஆனது மனசு.
எப்போது வருவாய் கூட்டிப் பெருக்க?

உன்
ஈர இதழின் எச்சில் பட்டு
என்
இதயத் திரியின் நெருப்பில் விழுந்து
இருட்டாய்ப் போனது இதய வீடு.
எப்போது வருவாய் விளக்கை ஏற்ற?

அக்கம் பக்கம் பார்த்து பார்த்து
அடுத்தவர் சொல்லுக்கு அடங்கி நடந்து
இறுகிப் போனது இதயக் கதவு.
எப்போது வருவாய் இழுத்துத் திறக்க?

நீ
வீசிச் சென்ற காதல் வித்து
விழுந்து முளைத்து எழுந்து வளர்ந்து
வாடிக்  கிடக்குது வானம் பார்த்து.
எப்போது வருவாய் மழையாய்ப்  பொழிய?

மூச்சுக் காற்றின் உஷ்ணம் கொண்டு-நீ
மூட்டிச் சென்ற மோக நெருப்பில்
பற்றிப் பரவி எரியுது தேகம்.
எப்போது வருவாய் தீயை அணைக்க?

முகத்தைத் தேடி முகவரி தொலைத்து
மூலை இடுக்கில் முடங்கிக் கிடந்து
உறங்கிக் கிடக்குது உள்ளம் ஒன்று.
எப்போது வருவாய் உலுக்கி எழுப்ப?

தனியே வானில் தவித்துப் பறந்து
துணையைத் தேடி துடித்து அலைந்து
துவண்டு போனது சின்னச் சிறகு.
எப்போது வருவாய் இணைந்து பறக்க?

                                             -சிவகுமாரன்

ஞாயிறு, ஆகஸ்ட் 29, 2010

ஹைகூ கவிதைகள் 5

சேலை கிழிந்தது
மகளுக்கு மகிழ்ச்சி
தாவணி.

ஒழுங்காய் சுத்தமாய்
அழகே இல்லாமல்
குழந்தை இல்லா வீடு.

சுடாதே சுடாதே
அழுதது குழந்தை
பலூன்கள் பாவம்

பேய்வாழும் மரத்தடியில்
ஒய்யார உறக்கம்
வெளியூர்க்காரன்.

குருட்டுப் பிச்சைக்காரனின்
கோணி விரிப்பில்
செல்லாக்காசுகள்.

காதல் வெண்பாக்கள் 4

          சர்வம் சக்திமயம்
பண்பாடிப் பார்த்தேன்-என்
  பாட்டில்நீ! கொஞ்சம்நான்
கண்மூடிப் பார்த்தேன்
  கனவில் நீ! -விண்மூடும்
மேகம் தனைப்பார்த்தேன்
  மின்னல்நீ! நெஞ்சமது
நோகும் இடம்பார்த்தேன்
      நீ.

    மார்கழிப் பூவே
புள்ளிவைத்து நீபோட்ட
  பூக்கோலம் உள்ளுக்குள்
அள்ளிவைத்துச் சென்றாய்
  அடிமனதை!- மல்லிகையே
நாளை வருவாயா?
  நானிருப்பேன் இங்கேயே
காலை வரும்வரையில்
       காத்து.
                           
                           -சிவகுமாரன்

சனி, ஆகஸ்ட் 28, 2010

கனவுகள்

                    

என்போல்  உனக்கும்  கனவினில் வருமா
அன்பால் சூழ்ந்த அந்தக் காலம்?


பொம்மைக் கடை கோலிக் குண்டு
கம்மாக் கரை ஆல மரம்


ஊதா ட்ரௌசர் வெள்ளைச்சட்டை
மாதா ஸ்கூலு ஆண்டுவிழா


அட்டைக் கத்தி ஒட்டு மீசை
கட்டப் பொம்மன் ஜாக்ஸன் துரை


சந்தோஷமான சரோஜினி டீச்சர்
"வந்துட்டார்றா" சந்தான வாத்தியார்


எரிச்சலான திங்கள் காலை
சிரிச்சுப் பறக்கிற வெள்ளி மாலை


தூக்குச் சட்டி தயிர் சாதம்
காக்கா கடி கல்கோனா மிட்டாய்


இலந்தப் பழம் ஜவ்வு மிட்டாய்
நலந்தானா ஆடிய நம்ம ஆளு


குரங்கு பெடல் வாடகை சைக்கிள்
அரங்க சாமி அய்யா தமிழு


கொட்ட கொட்ட முழிச்சுப் பாத்த
வட்டத் திடல் வள்ளி திருமணம்


கும்மாளமிட்ட குளத்துத் தண்ணீர்
அம்மா கையில் உருண்டை சோறு


அப்பாவோட சிகரெட் வாசம்
அப்பத்தாவின் வெத்தலை உரலு


ஒண்ணு ஒண்ணா இந்தக் காட்சிகள்
கண்ணை மூடினால் கனவுல வருது


மனசைப்  பிரிச்சு மல்லாக்கப் போட்டு
அலசிப் பார்த்து ஆராய்ச்சி செய்யும்


மனோ தத்துவ நண்பருகிட்ட
கனவுக்கெல்லாம் காரணம் கேட்டேன்


இளமையை முழுசா அனுபவிக்காம
வளர்ந்து தொலைச்ச காரணத்தாலே


இங்கேயே உண்டாம் இன்னொரு பிறவி
அங்கே என்ன அதே கதை தானா ?


                                                               -சிவகுமாரன்

வெள்ளி, ஆகஸ்ட் 27, 2010

கோஷங்கள்

                       

உலகத் தமிழர்களின் ஒற்றுமை ஓங்குக.


உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர்  வாழ்க.


உலகத் தமிழ்ச் செம்மொழி வெல்க.


திக்கெட்டும் பரவட்டும் தேமதுரத் தமிழோசை.


தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.

தமிழர் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு...


பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்.....
சங்காரம் நிஜமென்று சங்கே முழங்கு

தமிழன் என்று சொல்லடா
தலைநிமிர்ந்து நில்லடா

பின்குறிப்பு:
ஒவ்வொரு முழக்கத்திற்கு முன்பும்
இணைத்துக் கொள்க
"ஈழம் தவிர்த்த" என்று.
                                                           -சிவகுமாரன்

வியாழன், ஆகஸ்ட் 26, 2010

காதல் வெண்பாக்கள் 2

        மழை
ஏக்கப் பெருமூச்சை
   என்னிதயச் சோகத்தைப்
போக்கும் உனது
    பனிப்பார்வை! -தூக்கக்
கனவுக்குள் பேசும்உன்
   கண்கள்! அவையென்
மனதுக்குள் பெய்யும்
     மழை.

பொய்த்தவம்.
மனக்குகையில் நான்தேடும்
   மௌனம் கலைக்கும்
கணக்கின்றி நீவீசும் 
   கற்கள்!- எனக்குள்ளே 
என்னைத் தினம் தேட
  எத்தனிப்பேன், ஆனாலும்
உன்னைத் தொடரும் 
  உயிர்.

                               -சிவகுமாரன்.

செவ்வாய், ஆகஸ்ட் 24, 2010

சிகரெட்

மனித வாயில்
மரண வாயில்.

இருட்டுக்காகவே
எரியும் விளக்கு.

தவணை முறையில்
தலைக்குக்  கொள்ளி

தலைவனையே கொல்லும்
தற்கொலைப் படை.

அழிவை எழுதும் 
ஆறாவது விரல்.

இருவிரல் இடையே
எமனின் தூதன்.

                                      -சிவகுமாரன்.





திங்கள், ஆகஸ்ட் 23, 2010

அட .... ஆமாம் !!

மனதின் அந்தகாரத்தில்
ஒளிந்து கொண்டிருக்கிறது
கோபம்.

அறிவு வெளிச்சம்
அற்றுப் போகும்போது
அது
உணர்ச்சி ஊன்றுகோல் தாங்கி
உலா வருகிறது.


நீண்ட காலமாய்
சேமித்து வைத்திருந்த
நிம்மதிச் செல்வத்தை
அது
நிமிடத்தில் திருடிவிடுகிறது.

கொஞ்சம் பதுங்கியிருந்து
அதன்
குடுமியைப் பிடித்திழுத்து
முகத்திரை கிழித்தால் தான்
தெரிகிறது
அது.....
முகமூடி போர்த்திவந்த
பயம்.

                                             -சிவகுமாரன்

ஞாயிறு, ஆகஸ்ட் 22, 2010

ஈழம்....இருக்கிறதா ஈரம்

 
யாதும் ஊரே யாவரும் கேளிர் 
மீதம் உளரோ ஈழத்தில் கேளிர் ?

செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
தேன்வந்து பாயுது காதினிலே
ஈழம் என்கின்ற போதினிலே
ஈயம் பாயுதோ காதினிலே?

சிங்களத் தீவினுக்கோர்
பாலம் அமைப்போம்
 எங்களின் இனப்பிணங்கள்
அள்ளி வரவோ?

தமிழை பழித்தவனை
தாய் தடுத்தாலும் விடேன்
தமிழரை அழித்தவனை
யார் தடுத்ததால் விட்டீர் ?

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
பிறந்து பாரேன்
ஈழத்தில்
தமிழனாய்.


                               -சிவகுமாரன்

ஞாயிறு, ஆகஸ்ட் 15, 2010

தமிழ்

 
                    
செந்தமிழே தாயே
  சிறுபிள்ளை என்நாவில்
வந்தவளே! எங்குலத்து
  வாழ்வரசி -எந்தன்
மனக்கோயில் உள்ளிருக்கும்
  மாதேவி! என்றும்
உனக்காகத் தானென்
   உயிர்.